Friday, February 28, 2025

ஜா. தீபாவின் மறைமுகம் கதையை பற்றிய ஒரு விமர்சனப் பார்வை:


ஜா. தீபாவின் மறைமுகம் என்னும் கதையை வாசிக்கும்போது இது வரலாற்றில் எங்கு நிகழ்கிறது என்னும் கேள்வியே முதலில் ஒரு வாசகனை வந்தடைகிறது. இது ஒரு உண்மை சம்பவத்தை சார்ந்து புனையப்பட்டது என்பதால் மட்டுமே அதன் காலம் கதையில் தெளிவாக புலப்படுகிறது. அதை தாண்டி இக்கதையின் விவரணைகள், கதை புலம் ஆகிய எதன் வழியாகவும் காலகட்டத்தை நிர்ணயிக்க முடியாது. இது எழுத்தாளர் வேண்டுமென்றே எடுத்த முடிவாக இருக்கலாம். ஆணின் ஒரு முகம் பெண்ணுக்கு நிரந்தரமாகவே மறைக்கப்பட்டுள்ளது அதன் மூலம் புற உலகும் மறைக்கப்படுகிறது. இவ்வாறு மறைவில் வாழும் பெண்களின் நித்தியமான நிலை குறித்து கூற முயல்வதாக எடுத்து கொள்ளலாம். ஆனால் அவ்வாசிப்பு என்னை பெரிதாக கவரவில்லை. 


மறைமுகம் என்ற இக்கதை வரலாற்று சித்திரத்தை கோருகிறது என்றே உணர்கிறேன். அது கதையில் வரும் நிகழ்வை வரலாற்றில் நாம் பொறுத்தி பார்ப்பதற்காக மட்டுமல்ல. இந்திய சமூகத்தில் அவ்வரலாற்று காலம், அதாவது விடுதலைக்கு முந்தைய காலம், ஒட்டுமொத்தமாக எல்லோருக்குள்ளும் ஒரு பிளவாளுமையை உருவாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது.  லட்சியவாதத்திற்கும் தனிவாழ்க்கைக்கும் இடையில், சமூகத்திற்கும் குடும்ப அமைப்பிற்கும் இடையில், அதன் நீட்சியாக பெண்ணிற்கும் ஆணிற்கும் இடையில் ஏற்பட்ட பிளவு. அல்லது ஏற்கனவே இருந்த இடைவெளி பெரிதானதன் வரலாறு. இவ்வகையில் கதையை பார்க்கும்போது மேலும் விரிவடைகிறது. 


கதையின் உணர்ச்சி மையமாக தன் கணவன் உண்மையில் யார்? அவன் எப்படிப்பட்டவன்? அவனது உலகில் என்ன உள்ளது? எதை விரும்புகிறான்? எதன்மீது பற்று கொண்டுள்ளான்?  என்று அறிந்துகொள்ள மட்டுமே விரும்பும் மனைவி காமாட்சி இருக்கிறாள். அவள் அவனது உலகத்திற்குள் நுழைய விரும்புகிறாள். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவனுக்கு கடிதங்கள் வந்து சேர்கின்றன. ஆனால் வாசிக்க தெரியாத அவளுக்கு அவை வெற்று தாள்களாக உள்ளன. அவனை வீட்டிலிருந்து விலக்கி வைக்கும் சக்தியாக மட்டுமே சமூகத்தையும் அதன் பிரச்சனைகளையும் அவள் காண்கிறாள். அவளது வாழ்க்கை சிறு சிறு அன்றாட வலிகளால் ஆனது. அவள்  அம்மா அவளுக்கு கையளித்து சென்றவை அவை. வலிகளை தாங்கிக் கொள்வது அன்றி அதிலிருந்து தறுக்கியெழுவது குறித்து அவள் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. கதையின் இறுதி தருணம் வரை. 


குறைந்தபட்சம் அவள் கேட்பது தன் குழந்தை மூலமாகவாவது கணவனுடன் எதோ ஒரு உறவை. பிறந்து சில நாட்களே ஆன அவள் மகளிடம் இதையெல்லாம் கூறுகிறாள். குழந்தையை அவன் கையில் வாங்கிக் கொள்ளும் போது அவன் முகத்தை ஒரு முறை நல்ல வெளிச்சத்தில் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவள் நினைக்கும் தருணம் காமாட்சியின் கதாபாத்திரத்தை அணுக்கமாக்குகிறது. 


இறுதி வரை குழந்தையை காண அவன் வருவதில்லை. முடிவில் காமாட்சியால் அவனது முகத்தை சடலத்தில் அடையாளம் காணமுடியாத இடத்தில் கதையின் உணர்ச்சி உச்சத்தை அடைகிறது. இந்த தருணத்தின் எடையை மறுக்க முடியாது, ஆனால் அது எந்த நுட்பமும் இல்லாமல் கையாளப்பட்டுள்ளது. 


கதையின் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று அதன் மிகையான நாடகத்தன்மை கொண்ட உரையாடல்கள். குறிப்பாக கதையின் இறுதியில் வரும் உரையாடல். கதாபாத்திரங்களின் வலி இயல்பாக வெளிப்பட அனுமதிப்பதற்கு பதிலாக, இவ்வுரையாடல்கள் இடைவிடாமல் ஆசிரியரின் கருத்தை நிலைநாட்ட முந்துகிறது. 


நுட்பங்களுக்கு சிறிதும் இடமளிக்காத விவரணைகளும் கதையின் போதாமைகளில் ஒன்றாக கூறலாம். இறந்து போன தன் ஒரு மாத குழந்தையை கையில் வைத்திருக்கும் காமாட்சியில் இருந்து கதை துவங்குகிறது. இரவு முழுக்க அழுதுமுடித்து விடியல் நெருங்கும் நேரம். அந்த தருணத்தின் வெறுமையை நுட்பமான உடலுணர்வு, தொடுகை ஆகியவற்றால் மட்டுமே விவரித்து கொண்டுசெல்ல முடியும். அவ்வாறு தான் கதை தொடங்குகிறது. ஆனால் விரைவில் ஆசிரியர் இடைமறித்து வாசகன் அங்கு என்னென்ன  உணரவேண்டும் என விளக்குகிறார்.  


கேட் ஷோபனின் awakening என்னும் நூலில் கதாநாயகி தன்னை அறிந்து கொள்ளும் தருணம், Edith Wharton எழுதிய House of Mirth என்னும் நாவலில் லில்லி அவளது பாதுகாக்கப்பட்ட சிறு உலகின் எல்லைகள் உடைவதை உணரும் தருணம் என பெண் கதாபாத்திரம் இயல்பென்று நம்பியிருந்த வாழ்க்கை சித்திரம் உடைபடும் இடங்கள் பல பெண்ணெழுத்தில் உள்ளன. இப்படி ஒரு பெரிய நிரையில் இக்கதையையும் பொறுத்தி பார்க்கலாம். ஆனால் இத்தருணங்களின் நுட்பம் அவை எந்த அளவிற்கு ஒரு தனிமனத்தின் அகத்திற்குள், ஆழத்திற்குள் செல்கிறது என்பதில் உள்ளது. அந்நாவல்களில் வரும் இது போன்ற தருணங்கள் அனைத்திலும் அந்த முதல் உலுக்கல் உடலில் நிகழ்ந்து பின் தர்க்கத்தில், அடியாழத்தில் நிகழ்கிறது. அகவயமான நுட்பமும் பின் புலத்தில் அதன் வரலாற்று சித்திரமும் இணைந்து வரும்பொழுதே இக்கதையில் நிகழ்ந்திருக்க வேண்டிய கலை உச்சம் உருவாகியிருக்கும். 


No comments:

Post a Comment

ஜா. தீபாவின் மறைமுகம் கதையை பற்றிய ஒரு விமர்சனப் பார்வை:

ஜா. தீபாவின் மறைமுகம் என்னும் கதையை வாசிக்கும்போது இது வரலாற்றில் எங்கு நிகழ்கிறது என்னும் கேள்வியே முதலில் ஒரு வாசகனை வந்தடைகிறது. இது ஒரு ...